Friday, October 16, 2009

அமீரக அண்ணனுக்கு ஒரு கடிதம்
தாய்மடி பார்க்காதவளை
தமயனே தோள்சுமந்தாயே………
உன்முகம் பார்க்க ஏங்கும்
தமயேந்தி நான்……….

அண்ணா !........
ஞாபகதுளிகள்
சில உனக்கு……….

கடல் மண்ணூக்குள்
கால் புதைத்து
அழைப்பாய்…………
அழுதுகொண்டே
அவிற்றெரிந்து உன்னை
அடைவேன்……….
அப்படியே
அனைத்து கொள்வாயே!......
ஞாபகமிருக்கிறதா?..............

அம்மா எங்கே?..யென
நான் கேட்க
நிலவினை காட்டினாய்…..
ஒருநாள்
மழைவர
அம்மாவை
யாரோ அடிக்கிறார்கள்
என்றேன்……

மறுநாள்
அம்மா சேலை
காய்கிறது என
வானவில் காட்டினாயே…..
ஞாபகமிருக்கிறதா?.....

மதுரை சந்தையில்
மாடு விற்றுவந்தால்
வாங்கி வருவதெல்லாம்
உனக்கு என்பாயே….
ஞாபகமிருக்கிறதா?.....

கண்மாய்க்கு
கால்நடையாய் நடந்து
கெண்டை மீன்பிடித்து
நீ வைத்த சமையலுக்கு
என் பெயர் சூட்டினாயே!....
ஞாபகமிருக்கிறதா?.....

மார்கழியில் கோலமிட
மா புள்ளி அதிகம் வைக்க
அழித்து விட்டு….
நீ வைத்த புள்ளி
நட்சத்திரமானது
என்றாயே
ஞாபகமிருக்கிறதா?.....

இன்னும் எத்தனை
ஞாபகங்கள்….
என் நெஞ்ச பைக்குள்
தூசியுடன்…..


இப்போதும்
எனக்கும் சேர்த்து
சுவாசிக்கிறாயே…..
அமீரகத்தின் அனல்காற்றை…..

நான் பூப்பெய்த போது
பறந்தாய்…..
புது உயிர் வந்தும்
நீ திரும்பவில்லையே….

என் விழிகள்
தூங்கி… தூங்கி…
விழிக்கிறது
கனவிலாவது
வருவாய் என…..

இந்த ஓடம்
நீ வரும் வரை
காத்துக் கிடக்கும்
ஆற்றங்கரையில்…..

உன்னை
சுமந்து செல்ல…

- முகவை முகில்

Friday, September 11, 2009

இதோ, இறுதி எச்சரிக்கை !

அனைவருக்கும் பசுமை வணக்கங்கள்!


'இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 23% குறைவாக பெய்துள்ளது. இதற்கு காரணம், அரபிக் கடல் பரப்பில் வெப்பம் அதிகரித்ததுதான். நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்பு ஆகியவற்றுக்கு இடையேயான வெப்பத்தின் வேறுபாடு அதிகமாக இருந்தால்தான், கடலில் இருந்து வீசும் காற்றை, தரைப் பகுதி வெப்பம் ஈர்த்து மழை பெய்யச் செய்யும். ஆனால், குளோபல் வாமிங் காரணமாக நிலப்பரப்பைப் போலவே, கடல் பரப்பிலும் வெப்பம் அதிகரித்து வருவதால்' நிலைமை சிக்கலாகிக் கொண்டிருக்கிறது' என்று சொல்லியிருக்கிறார்கள் புனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள்.
இத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. 'இந்த நிலை நீடித்தால்... இந்தியாவில், 150 ஆண்டுகளுக்குப் பிறகு தென்மேற்கு பருவ மழை என்பதே இருக்காது' என்றும் அதிர்ச்சி கிளப்பியுள்ளனர்.

இதை இறுதி எச்சரிக்கை என்று சொல்வதே சரியாக இருக்கும்!ஆம், பல ஆண்டுகளாவே, குளோபல் வாமிங் பற்றி எச்சரித்துக் கொண்டுதான் உள்ளனர் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் ஆர்வலர்களும். இதற்காகவே உலகளாவிய அமைப்புகளும்கூட உருவாக்கப்பட்டு அடிக்கடி மாநாடுகள் கூட்டப்படுகின்றன. ஆனால், அங்கு எடுக்கப்படும் முடிவுகள் எல்லாமே 'ஏட்டுச் சுரைக்காய்' என்பதாக கோப்புகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

சூழலைப் பற்றி கவனம் கொள்ளாமல் பூமிக்கு கேடு விளைவிக்கும் வேலைகளை மனித இனம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. தேவைக்கு மிஞ்சிய வகையில் வாகனப் பெருக்கம்; கட்டுப்பாடில்லாத தொழில் வளர்ச்சி; தாறுமாறான காடு அழிப்பு என்று ஒவ்வொரு செயலுமே, நுனிமரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டும் மூடனின் வேலையாக தொடரும்போது... இயற்கை தன் கோபத்தைக் காட்டாமல் என்ன செய்யும்?

எனவே, இப்போதைய அறிகுறிகளையே 'இறுதி எச்சரிக்கை' என எடுத்துக் கொண்டு, பூமித் தாய்க்கு பசுமைக் குடை பிடிக்கும் வேலையை ஆரம்பிப்போம்.

இல்லாவிட்டால்...?!


ந‌ன்றி: ப‌சுமை விக‌ட‌ன்